1281

காமத்துப்பால்

புணர்ச்சி விதும்பல்

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்

கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

Ullak Kaliththalum Kaana Makizhdhalum

Kallukkil Kaamaththir Kuntu

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகை தன்மையும் கள்ளுக்கு இல்‌லை; காமத்திற்கு உண்டு.

சாலமன் பாப்பையா உரை

நினைத்த அளவிலே உணர்வு அழியாமல் உள்ளம் கிளர்தலும், பார்த்த அளவிலே உணர்வு அழிய உள்ளம் கிளர்தலும் கள் உண்பவர்க்கு இல்லை; காதல் வசப்பட்டவர்க்கே உண்டு.

கலைஞர் மு.கருணாநிதி உரை

மதுவை அருந்தினால்தான் இன்பம், ஆனால் காதல் அப்படியல்ல; நினைத்தாலே இன்பம்; காதலர்கள் ஒருவரையொருவர் கண்டாலே இன்பம்.

பரிமேலழகர் உரை

[அஃதாவது , தலைமகனும் தலைமகளும் புணர்ச்சிக்கண்ணே விரைதல் . மேற் புணர்ச்சி மிகுதிபற்றித் தலைமகன் பிரிதற் குறிப்பு அறிவுறுத்தத் தலைமகள் , அவன் மாட்டே நிகழாது வேட்கை மிகவினாற் பின்னும் தன்கண்ணே நிகழ்தலான் . இது குறிப்பு அறிவுறுத்தலின் பின் வைக்கப்பட்டது.] (பிரிதற்குறிப்பினன் ஆகியானொடு நீ புலவாமைக்குக் காரணம் யாது? என, நகையாடிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) உள்ளக்களித்தலும் - நினைந்த துணையானே களிப்பெய்தலும்; காண மகிழ்தலும் - கண்ட துணையானே மகிழ்வெய்தலும்; கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு - கள்ளுண்டார்க்கு இல்லை, காமம் உடையார்க்கு உண்டு. (களித்தல் - உணர்வழியாதது. மகிழ்தல் - அஃதழிந்தது, இவ்விரண்டும் உண்டுழியல்லது இன்மையின் 'கள்ளுக்கு இல்' என்றாள். 'உண்டு' என்பது இறுதி விளக்கு. 'அப்பெற்றித்தாய காமம் உடையான் புலத்தல் யாண்டையது' என்பதாம்.).

மணக்குடவர் உரை

காதலரை நினைத்த அளவிலே களிப்புப் பெறுதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி பெறுதலும் களித்தலையும் மகிழ்தலையும் தனக்கு இயல்பாகவுடைய கள்ளிற்கு இல்லை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

நினைத்த பொழுதே களிப்படைதலும் கண்டவுடனே மகிழ்ச்சியுறுதலும் கள்ளுண்பார்க்கு இல்லை; காமம் உடையார்க்கு உண்டு.

🌏 English Translations & Explanations

Explanation

To please by thought and cheer by sight is peculiar, not to liquor but lust.

Translation

Gladness at the thought, rejoicing at the sight, Not palm-tree wine, but love, yields such delight.

English Couplet

Gladness at the thought, rejoicing at the sight,Not palm-tree wine, but love, yields such delight