151

அறத்துப்பால்

பொறையுடைமை

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

Akazhvaaraith Thaangum Nilampolath Thammai

Ikazhvaarp Poruththal Thalai

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.

சாலமன் பாப்பையா உரை

தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப் பொறுப்பது முதன்மை அறம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்.

பரிமேலழகர் உரை

[அஃதாவது, காரணம் பற்றியாதல், மடைமையானாதல் ஒருவன் தமக்கு மிகை செய்தவழித் தாமும் அதனை அவன்கண் செய்யாது பொறுத்தலை உடையராதல். நெறியின் நீங்கிய செய்தாரையும் பொறுக்க வேண்டும் என்றற்கு, இரு பிறன்இல் விழையாமையின் பின் வைக்கப்பட்டது.) அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல-தன்னை அகழ்வாரை வீழாமல் தாங்கும் நிலம் போல; தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை-தம்மை அவமதிப்பாரைப் பொறுத்தல் தலையாய அறம். (இகழ்தல்; மிகையாயின செய்தலும் சொல்லுதலும்).

மணக்குடவர் உரை

தன்னை யகழ்வாரைத் தரிக்கின்ற நிலம்போலத் தம்மை யிகழுபவர்களைப் பொறுத்தல் தலைமையாம். இது பொறுத்தானென் றிகழ்வாரில்லை; அதனைத் தலைமையாகக் கொள்வார் உலகத்தாரென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

தன்னைத் தோண்டுபவர்களையும் கீழே வீழாமல் தாங்கிக்கொண்டிருக்கும் நிலத்தினைப் போலத் தம்மை இகழ்பவர்களையும் பொறுத்துக் கொள்ளுதல் தலையான அறமாகும்.

🌏 English Translations & Explanations

Explanation

To bear with those who revile us, just as the earth bears up those who dig it, is the first of virtues.

Translation

As earth bears up the men who delve into her breast, To bear with scornful men of virtues is the best.

English Couplet

As earth bears up the men who delve into her breast,To bear with scornful men of virtues is the best