273

அறத்துப்பால்

கூடா ஒழுக்கம்

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

Valiyil Nilaimaiyaan Valluruvam Petram

Puliyindhol Porththumeyn Thatru

📚 Commentaries & Meanings

🔖 Tamil Commentaries

மு.வரதராசனார் உரை

மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை பசு மேய்ந்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை

கெட்டவன் நல்லவன் போல நடிப்பது, பசு புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு மேய்ந்தது போலாகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

மனத்தை அடக்க முடியாதவர் துறவுக்கோலம் பூணுவது, பசு ஒன்று புலித்தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்வது போன்றதாகும்.

பரிமேலழகர் உரை

வலி இல் நிலைமையான் வல் உருவம்- மனத்தைத் தன் வழிப்படுத்தும் வலி இல்லாத இயல்பினை உடையான் வலியுடையார் வேடத்தைக் கொண்டு தான் அதன்வழிப்படுதல்; பெற்றம் புலியின் தோல் போர்த்து மேய்ந்தற்று - பசு 'காவலர் கடியாமல்' புலியின் தோலைப் போர்த்துப் பைங்கூழை மேய்ந்தாற் போலும். (இல்பொருள் உவமை. 'வலிஇல் நிலைமையான்' என்ற அடையானும், மேய்ந்தற்று என்னும் தொழில் உவமையானும் வல் உருவத்தோடு மனவழிப்படுதல் என்பது பெற்றாம். காவலர் கடியாமை 'புலி புல் தின்னாது' என்பதனாலும் அச்சத்தானும் ஆம். ஆகவே, வல்உருவங் கோடற்குப் பயன் அன்ன காரணங்களான் உலகத்தார் அயிராமை ஆயிற்று. இவ்வாறு தனக்குரிய இல்லாளையும் துறந்து வலியும் இன்றிப் பிறர் அயிராத வல்உருவமுங் கொண்டு நின்றவன் மனவழிப்படுதலாவது, தன் மனம் ஓடிய வழியே ஓடிமறைந்து பிறர்க்கு உரிய மகளிரை விழைதலாம். அவ்வாறாதல், பெற்றம் தனக்கு உரிய புல்லைவிட்டுப் பிறர்க்குரிய பைங்கூழை மேய்ந்தாற்போலும் என்ற உவமையான் அறிக.).

மணக்குடவர் உரை

வலியில்லாத நிலைமையை யுடையவன் வலிதாகிய தவவுருவங் கோடல், பெற்றமானது பிறர் பயப்படும்படி புலியினது தோலைப் போர்த்துப் பைங்கூழ் மேய்ந்த தன்மைத்து.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை

மனவலிமை இல்லாதவர்கள் வலிமையுடையார் போலத் தவ வேடங் கொண்டு ஒழுக்கக் கேட்டினைச் செய்தல் எப்படிப்பட்டதென்றால், பசுவானது புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு அயலான் பயிரை மேய்ந்தது போன்றதாகும்.

🌏 English Translations & Explanations

Explanation

The assumed appearance of power, by a man who has no power (to restrain his senses and perform austerity), is like a cow feeding on grass covered with a tiger's skin.

Translation

As if a steer should graze wrapped round with tiger's skin, Is show of virtuous might when weakness lurks within.

English Couplet

As if a steer should graze wrapped round with tiger's skin,Is show of virtuous might when weakness lurks within